About Us

 

 

எங்களை வழி நடத்தும் எங்கள் அப்பா ஆசார்யர்
ஸ்ரீ ஸ்ரீ
முசிறி அனந்த நாராயண வாஜபேயயாஜீஅவர்களுக்கும்
மாதுஸ்ரீ அம்மாவுக்கும் எங்கள் பணிவான வணக்கங்கள்

 

தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் ஸ்ரீமான் ஸுப்ரஹ்மண்யருக்கு புத்ரராக 05-01-1936ல் பிறந்து ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகளால் ஈர்க்கப்பட்டு அவர் ஆக்ஞைப்படி ஸம்ப்ரதாய முறையில் பனங்குடி ப்ரம்மஸ்ரீஅனந்தராம கனபாடிகள், மணக்கால் ஸ்ரீ மஹாலிங்க கனபாடிகள் போன்றவர்களிடம் கிருஷ்ண யஜுர்வேதம் ப்ரக்ருதி விக்ருதி பாகங்கள் கற்றுணர்ந்து திருவையாறு ப்ரும்ஹஸ்ரீ பாலக்ருஷ்ண சாஸ்திரிகளிடம் வேதபாஷ்யம் கற்று,

 

சென்னை ஸம்ஸ்க்ருதக்கல்லூரியில் நியாயம் மீமாம்ஸை அத்வைத வேதாந்த, சாஸ்திரங்கள் அப்யஸித்து, அதே கல்லூரியில் ஆசிரியராகவும் திருப்பதி ஸ்ரீ வேங்கடேஸ்வரா யுனிவர்ஸிடியில் பல காலம் ப்ரிண்ஸ்பாலாகவும் பணியாற்றி, நீ உனது கிராமத்தில் வஸித்துக்கொண்டு, புராண ப்ரவசனம் செய்து, (ச்ரௌத) அனுஷ்டானங்களைச் செய்து வா என்னும் காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவாளின் கட்டளையை ஏற்று, உயர்ந்த பதவியை தியாகம் செய்து, தனது சொந்த கிராமமான திருச்சி ஜில்லாவில் முசுகுந்தபுரீ என்னும் முசிறியில் வஸித்து வருகிறார் ப்ருஹ்மஸ்ரீ அனந்தநாராயண வாஜபேயயாஜி அவர்கள்.


அந்தணராகப்பிறந்த ஒவ்வொருவரும் உலக நன்மையைக்கருதி, குறிப்பாக உரிய காலத்தில் மழைபெய்யச்செய்ய, யாகங்கள் செய்ய வேண்டும் என்னும் சாஸ்திர வாக்யப்படி, கோனேரிராஜபுரத்தில் ஸோமயாகம் அனுஷ்டித்து, காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் தொடர்ந்து ஸப்த ஸம்ஸ்தைகளையும் செய் என்னும் ஆக்ஞைப்படி அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோட, அதிராத்ரம், அப்தோர்யாமம், வாஜபேயம் போன்ற பல யாகங்களைச் செய்து, தினஸரி நித்யாக்னிஹோத்ர ஹோமம் செய்து கொண்டு, தனது க்ருஹத்திலேயே குருகுல முறைப்படி பலருக்கும் வேதம் காவ்யம் சாஸ்திரம் ஆசாரங்களை போதித்துக் கொண்டு வஸிக்கும் இவர், தேச ஸேவை செய்யும் பெரும் தியாகி என்றால் மிகையல்ல. (இவரிடம் படித்த பல நபர்களில் வைதிகஸ்ரீ ஆசிரியரும் ஒருவர்).


பற்பல ஸ்தாபனங்கள் மூலம் வேதபாஷ்ய ரத்னம், வேத நிதி, ச்ரௌத ஸ்மார்த்த வேத சாஸ்திர ஸுதாநிதி, போன்ற பல விருதுகளையும் மும்பை பாரதீய வித்யாபவனின் குரு ஞானேஸ்வரானந்த வேதரத்ன புரஸ்காரையும் பெற்ற இவரது ஸேவையைப்பாராட்டி பாரத தேசத்தின் மிக உயர்ந்த விருதான ஜனாதிபதி விருது 2007ல் இந்திய அரசாங்கத்தால் மான்புமிகு ஜனாதிபதி மூலம் வழங்கி கௌரவிக்கப்பட்டது, மேலும் இவர் கடந்த 24-012011 அன்று மும்பை ஸ்ரீ சங்கரமடம் சார்பாக ஸ்ரீ காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மூலம் விருதும் பாரிதோஷிகமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


திருவையாறு ஸ்ரீ ஸுந்தரேஸ்வர வாஜபேயீ, கருப்பத்தூர் ஸ்ரீ கோவிந்தராம வாஜபேயீ, முசிறி ஸ்ரீ யக்ஞராம வாஜபேயீ, ஸ்ரீ சிவராம கிருஷ்ண ஸோமயாஜீ ஆகியோர் இவரின் புதல்வர்கள், குளித்தலை ஸ்ரீ கோபாலகிருஷ்ண வாஜபேயீ, சென்னை ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹ கனபாடிகள்,மஹாதானபுரம் ஸ்ரீ ஸ்ரீனிவாஸ ஸோமயாஜீ, திம்மாச்சிபுரம் ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள் ஆகியோர் இவரின் மாப்பிள்ளைகள், மேலும் இவரின் பேரன்கள் சிஷ்யர்கள் என பலரும் கர்மானுஷ்டானத்தை ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்கள்,


சின்னஞ்சிறிய கிராமத்தில் தனது க்ருஹத்தில் (நெ 55, ழ்தன்வடல் அக்ரஹாரம் முசிறி பின் 621211 போன்: 9486260470) கோசாலை அமைத்துக்கொண்டு, சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக்கொண்டு, தொடர்ந்து அனுஷ்டானங்கள் செய்து கொண்டு, தம்மை நாடி வருபவர்களுக்கு தீர்க்க தரிசனத்துடன் தேவையான உபதேசங்களைச் செய்து கொண்டு,அந்தணர் எவ்வாறு வாழவேண்டும் என்று எடுத்துக் காட்டாக ஓர் மஹரிஷியாக வாழும் இவரது முன்னேற்றத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாக இருப்பவர் இவரது தர்மபத்னி மாதுஸ்ரீ ஆனந்தவல்லீ என்னும் பெண்மணியாவார். இவர்களை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசித்து நமஸ்கரித்து ஆசிபெறுபவர் மிகப்பெரும் பாக்யவான்கள் என்பதில் ஸந்தேஹமில்லை (வை.ராஜகோபால கனபாடிகள்: ஆசிரியர்-வைதிகஸ்ரீ:)